வழிப்பாதையை மீட்டுத்தரக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மல்லிசெட்டிகொட்டாய் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றது. இந்த குடியிருப்பு மக்கள் பயன்படுத்தி வந்த வழிப்பாதையை அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிலர் கற்களை வைத்து அடைத்து விட்டதாக தெரிகிறது. இந்த வழிப்பாதையை மீட்டுத்தரக் கோரி கிராம மக்கள் ஜருகு-ஈசல்பட்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த நல்லம்பள்ளி தாசில்தார் செந்தில், துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரங்கசாமி, சர்மிளாபானு போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதுகுறித்த பிரச்சினையை தீர்த்து வைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்த பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.