Categories
தேசிய செய்திகள்

அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் 1 வருட சம்பளத்தில் இருந்து 30% கட்: கர்நாடக அமைச்சரவை முடிவு

கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் ஊதியத்தில் 30% பிடித்தம் செய்யப்படும் என கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி ஓராண்டுக்கான ஊதியத்தில் 30% பிடித்தம் செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.15.36 கோடி நிவாரண நிதிக்கு கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இதுவரை 10 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தற்போது 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதில் 28 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். அதேபோல 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் வரும் 14ம் தேதியோடு முடிவடைய உள்ளது. மேலும் இன்று 16வது நாளாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது. அதனடிப்படையில், ஊரடங்கை நீடிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் ஏப்ரல் 14 தேதி பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஒவ்வொரு மாநிலமும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், கர்நாடக அரசு டாக்டர் தேவி ஷெட்டி தலைமையில் ஒரு சிறப்பு செயற்குழுவை அமைத்தது. இந்த குழு நேற்று ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. பல்வேறு அம்சங்களை கொண்ட அந்த அறிக்கையில், அனைத்து கல்வி நிறுவனங்களும் மே 30ம் தேதி வரை மூடப்பட வேண்டும்.

அதேபோல ஊரடங்கு ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட வேண்டும் எனவும் வாகன போக்குவரத்துக்கு துண்டிக்கப்பட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும் 14ம் தேதிக்கு பிறகு ஆட்டோ, டாக்ஸி போன்ற வாகனங்களை மட்டும் இயங்க அனுமதி வழங்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை தொடர்ந்து, கர்நாடகத்தில் இன்று அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதல் முடிவாக, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ). மேலவை உறுப்பினர்கள் (எம்எல்சி) ஆகியோரின் ஊதியத்தில் 30%-த்தை பிடித்தம் செய்வதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி அடுத்த ஓராண்டு வரை ஊதியத்தில் 30% பிடித்தம் செய்யப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக சுமார் ரூ.16 கோடி வரை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை செய்து பின்னர் அமைச்சரவை குழு தகுந்த முடிவு எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |