மும்பை நட்சத்திர விடுதிகளில் இருக்கும் அதிருப்தி MLA_க்களை சந்திக்க சென்ற அமைச்சர் சிவகுமாரை அங்குள்ள போலீசார் அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக மாநில சட்டசபையில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு 119 உறுப்பினர்களும் , பாஜகவுக்கு 105 உறுப்பினர்களும் உள்ளனர். காங்கிரஸ்+ ஜே.டி.எஸ் கூட்டணி சார்பில் குமாரசாமி மாநில முதல்வராகவும் , பாஜக எதிர்கட்சியாகவும் இருந்து வருகின்றது.
காங்கிரஸ் + ஜே.டி.எஸ் MLA_க்கள் ராஜினாமா :
கூட்டணி ஆட்சியில் தொடர்ந்து நிலவிவரும் அரசியல் குழப்பத்தால் அங்குள்ள காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியை சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்து விட்டு தனி விமானத்தின் மூலம் மும்பை சென்றனர்.
பாஜகவே காரணம் :
மும்பை சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அங்குள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆட்சிக்கு சிக்கல் எழும் சூழல் உருவாகியுள்ள நிலையில் MLA_க்களை கடத்தி சென்றது பாஜக என்று காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி நிர்வாகிகள் தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
மோடி மற்றும் அமித்ஷா தலையீடு :
கர்நாடக மாநில ஆட்சி கவிழும் சூழல் நிலவியுள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலாவரும் , காங்கிரஸ் கட்சி சட்டசபை தலைவருமான சித்தராமையா கூறுகையில் , அமித் ஷா, மோடி ஆகியோரின் உத்தரவின்பேரிலேயே அரசை கவிழ்க்க முயற்சிகள் நடந்து வருகின்றன. கட்சி விரோத நடவடிக்கைக்காக சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும்படி சபாநாயகரிடம் மனு ஒன்றை நாங்கள் அளிக்க உள்ளோம். ராஜினாமாவை ஏற்க வேண்டாம் என்றும் கேட்டு கொள்ள இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
மும்பை பயணம் :
கர்நாடகாவில் நடைபெற்று வரும் குழப்பமான சூழலை தடுத்து ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை காப்பற்ற மும்பையில் இருக்கும் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக அமைச்சர் சிவக்குமார் மும்பை பயணம் மேற்கொண்டார். ஆனால் அங்குள்ள போலீசார் சிவகுமாரை ஹோட்டலுக்குள் விடாமல் தடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக அரசியலின் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகின்றது.