ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி. நீர், ஜூலைக்கான 31.24 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு தர கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணை பிறப்பித்துள்ளது.
இதையடுத்து நீர்வரத்தை பொறுத்து தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்து விடுவதாக கர்நாடகம் தகவல் அளித்துள்ளது. இன்று காவிரி மேலாண்மை கூட்டம் அதன்தலைவர் ஆர்.கே.ஜெயின் தலைமையில் நடைபெற்றது. காணொலி மூலம் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக பொது பணித்துறை கூடுதல் செயலாளர் மணிவாசகம் பங்கேற்றார்.
காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமாரும் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. காவிரியில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவது குறித்து விவாதிக்க கர்நாடக தரப்பு மத்திய அரசிடம் அனுமதி கோரியது.
தமிழக அரசின் கடும் எதிர்ப்பால் மேகதாது அணை பற்றி காவிரி ஆணைய கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடகத்திற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் காவிரி நீரில் புதுச்சேரிக்கு 0.25 டி.எம்.சி நீரை தமிழகம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.