கர்நாடகா மாநிலத்தில் ஜெலட்டின் குச்சிகளை ஏற்றி சென்ற லாரி வெடி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 தொழிலாளர்கள் தீயில் கருகி பலியாகியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டத்தில் ஹுனசூரு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகே கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. நேற்று இரவு அந்த கல்குவாரி ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென்று லாரியிலிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் லாரி வெடித்து சிதறியது. இந்த தீ விபத்தில் லாரியில் பயணம் செய்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.
மேலும் விபத்து நடந்த இடத்தை சுற்றியுள்ள பல வீடுகள் சேதம் அடைந்தது. இதற்கிடையே இந்த விபத்தில் ஏற்பட்ட கரும்புகை அருகிலுள்ள கிராமங்களை சூழ்ந்தது. கல்குவாரிக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடிபொருள்கள் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.