கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு (2018) மே மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடந்தது. ஆட்சியமைக்க மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.104 இடங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருந்தது. காங்கிரசுக்கு 80 தொகுதிகள் கிடைத்தன. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 37 இடங்கள் கிடைத்தன.
காங்கிரஸ் கொடுத்த விலை :
தனிப்பெரும் கட்சியாக விளங்கியதால் எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனை தடுக்கும்விதமாக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைத்தது.
அதற்கு காங்கிரஸ் கொடுத்த விலை, குமாரசாமிக்கு முதலமைச்சர் பதவி. இந்த நிலையில் தொடர்ச்சியாக கூட்டணியில் குழப்பம் நிலவியது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக செயல்படத் தொடங்கினர்.
பாஜகவின் நிழல்களாக வலம்வந்த 17 எம்எல்ஏக்கள்?
இவர்கள் பாரதிய ஜனதாவின் பேச்சைக் கேட்டு இவ்வாறு நடந்துகொள்கின்றனர் என காங்கிரஸ் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் அப்போதைய சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் சர்ச்சைக்குரிய அந்த 17 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
உச்ச நீதிமன்றம் வரை சென்ற பஞ்சாயத்து
இதற்கிடையில் தங்களை பதவி நீக்கம் செய்தது தவறு என்று அந்தச் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை அக்டோபர் 25ஆம் தேதி, நீதிபதிகள் என்.வி. ரமணா, சஞ்சீவ் கன்னா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இன்று தீர்ப்பு :
உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், வருகிற டிசம்பர் 5ஆம் தேதி 15 தொகுதிகளுக்கு மறுதேர்தல் நடத்தப்படவுள்ளது.