கர்நாடகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக இரவு 10 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரையிலுள்ள ஊரடங்கு நேரத்தை மாற்றி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் நோக்கத்தில் கவர்னர்கள் வஜீபாய் வாலா தலைமையில் காணொலி காட்சி மூலம் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் முழு ஊரடங்கு அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதன்படி முழு ஊரடங்கு அமல்படுத்தும் முடிவில் மாநில அரசு இருந்தது.
ஆனால் பிரதமர் மோடி அதற்கு முன்னதாக இரவு 8.45 மணிக்கு டெலிவிஷன் மூலம் நாட்டு மக்களிடம் உரையாடியுள்ளார். அதில் ‘நாட்டில் முழு ஊரடங்கு இல்லை என்றும், முழு ஊரடங்கு கடைசி ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள்’ விடுத்துள்ளார். இதனால் கர்நாடக அரசு தனது முழு ஊரடங்கு அறிவிப்பு செய்வதை மாற்றிக்கொண்டது.இதற்கு பதிலாக கர்நாடகத்தில் வார இறுதி நாட்களில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு நேற்று இரவு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில அரசின் தலைமைச் செயலாளர் ரவிக்குமார் பெங்களூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியில் கர்நாடகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க முன்பாகவே பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு 10 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த நேரத்தை சிறிது மாற்றி இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமுல் படுத்தி உள்ளனர். மேலும் வாரத்தின் இறுதி நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று முடிவு செய்துள்ளனர்.
அதன்பின் பள்ளி கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் முழுமையாக மூடப்படுகிறது. ஆன்லைன் மூலம் கல்வி கற்க அனுமதி வழங்கியுள்ளனர். வணிக வளாகங்கள், தியேட்டர்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்கள் விளையாட்டு மையங்கள், நீச்சல் குளங்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்ட இடங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்படுகின்றன. அதன்பின் அனைத்து வகையான வழிபாட்டு தலங்களும் மூடப்படுகின்றன. ஆனால் அங்கு பூசாரிகள் பூஜை செய்ய அனுமதி உண்டு.
பிறகு உணவகங்கள் திறக்கலாம். ஆனால் உணவுகளை பார்சல் மட்டுமே வழங்க வேண்டும். கட்டுமான பணிகளுக்கு அனுமதி உண்டு. அனைத்து தொழில் நிறுவனங்களும் வழக்கம்போல் கொரோனா விழிப்புணர்வுடன் செயல்படலாம். மதுபான விடுதிகளில் மதுபானங்களை விற்பனை செய்ய மட்டுமே அனுமதி உண்டு. வங்கி காப்பீடு நிறுவனங்கள் பத்திரிக்கை ஊடகங்கள் மின்னணு வணிக நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை முடிந்தவரை வீடுகளிலிருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும். தேவையான அளவில் மட்டுமே அலுவலகங்களில் ஊழியர்களை பணிக்கு அமர்த்த வேண்டும். கோர்ட்டுகள் வழக்கம் போல் செயல்படும். அரசு அலுவலகங்களில் 50% பேர் மட்டுமே நேரில் வந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும். பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் 50% பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் சரக்கு போக்குவரத்திற்கு எந்தத் தடையும் இல்லை வழக்கம்போல் இயங்கலாம்.
விவசாயம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவங்கள் முழுமையாக செயல்படலாம். திருமண நிகழ்ச்சிகளுக்கு 50 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும். துக்க நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வழிகாட்டுதல் இன்று முதல் மே மாதம் 4-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று ரவிக்குமார் கூறியுள்ளார்.