கொரோனா தடுப்பூசி செலுத்த தயங்கும் கர்ப்பிணி பெண்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் மட்டும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதனையடுத்து கர்ப்பிணி பெண்கள் அங்குச் சென்று வழக்கமான மருத்துவர் பரிசோதனை செய்யப்பட்டு சத்துவாச்சாரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் கண்மணி முன்னிலையில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.
இவ்வாறு ஒரே நாளில் மாவட்டத்தில் 12 கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆகவே கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு அச்சம் தெரிவிப்பதால் குறைவான அளவே வருகை புரிகின்றனர். இதுகுறித்து சுகாதார அதிகாரி கூறும்போது, கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டபோது அவர்கள் முன் வராமல் அச்சம் தெரிவித்து வருகின்றனர். எனினும் ஆர்வம் இருக்கும் சிலருக்கு அவர்களின் குடும்பத்தினர் தடுப்பூசி செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் கர்ப்பிணிகள் முன்வருவதில்லை.
எனவே கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுக்கின்றனர். இதனைதொடர்ந்து தேவைப்படும் பட்சத்தில் அவர்களின் குடும்பத்தினருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்படுகின்றது. இந்த தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். அதன்பிறகு கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர்களுக்கு விருப்பம் இருந்தால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.