நீண்ட நாளுக்குப் பிறகு படத்தில் ஹீரோவாக நடிக்கும் கார்த்திக் சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை நிகழ்த்தி உள்ளார்.
தமிழ் சினிமாவில் நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு நடிகர் கார்த்திக் “தீ இவன்” என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். சிந்துபாத் படத்தை தயாரித்த டி.எம்.ஜெயமுருகன் இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் டி.எம்.ஜெயமுருகன் “தீ இவன்” படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, “நாம் தற்போது இருக்கும் நவீன காலம் கிராம பண்பாடு, நாகரீகம், உறவு ஆகியவை மறைந்து வருகிறது. அவைகளை எல்லாம் மீட்டு இந்தத் தலைமுறைக்கு தரும் படம் தான் தீ இவன். அண்ணன் தங்கை பாசத்திற்கென்று பல படங்கள் வந்திருக்கும். ஆனால் இப்படத்தின் மூலம் அண்ணன், தங்கை உறவை ரத்தமும், சதையுமாய் சொல்கிறோம்.
உயிரை விட மானம் தான் பெரிது என்ற தமிழர்களின் நாகரீகத்தை உணர்த்தும் படமாக இது இருக்கும். மேலும் தற்போது 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஹார்லி டேவிட்சன் பைக்கில் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்து சாகசம் செய்துள்ளார். ஆனால் இன்று வளர்ந்து வரும் நடிகர்கள் கூட இந்தக் காட்சிகளில் நடிக்க தயங்குவார்கள். இந்த சண்டைக்காட்சி படத்தில் பிரம்மாண்டமாக இடம் பெற்றிருக்கும்” என்று கூறியுள்ளார்.