காஷ்மீர் பண்டிதர்கள் 1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி, அகதிகளாகத் துரத்தப்பட்டனர். அந்தத் துயரத்தை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நினைவுபடுத்துவார்கள். அந்த வகையில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தாங்கள் காஷ்மீர் திரும்ப தயாராகவுள்ளதாக முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், அங்கு நடந்துவரும் பயங்கரவாத செயல்களுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் கலந்துகொண்ட காஷ்மீர் பண்டிதர் ஒருவர் ஈடிவி பாரத்துடன் பேசுகையில், ‘நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக காஷ்மீர் திரும்புவதற்காக காத்திருக்கிறோம். ஆனால் எங்களின் கனவு நிறைவேறவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளாக நரேந்திர மோடி அரசு ஆட்சியில் உள்ளது. ஆனால் அவர்கள் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை’ என்றனர்.
அவர் மேலும் கூறுகையில், ‘சட்டப்பிரிவு 370ஐ மாற்றியமைத்தல் மற்றும் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட சமீபத்திய முன்னேற்றங்கள் எங்கள் நம்பிக்கையை உயர்த்தியுள்ளன. பிரிவினைவாதிகளுக்கு எதிராக மோடி அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அங்கு தங்க பாதுகாப்பான வழியை மோடி அரசாங்கம் அமைத்துக் கொடுக்க வேண்டும்’ என்றார்.