காஷ்மீரில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்ததில் இன்ஸ்பெக்டர் மற்றும் மூதாட்டி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
காஷ்மீரில் அதிகளவு பனிப்பொழிவு உள்ளதால் சாலைகளும், குடியிருப்புகளும் பனியால் மூடப்பட்டன. இந்நிலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் எச்.சி. முர்மு என்பவர் ஸ்ரீநகரில் உள்ள முன்னாள் எம்எல்ஏ செய்யது எம் அக்கூன் என்பவரது வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஏற்பட்ட அதிக பனிப்பொழிவு காரணமாக திடீரென அவரது வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் பரிதாமாக உயிரிழந்தார்.
இதேபோல், அதிக பனிப்பொழிவு காரணமாக குப்வாரா மாவட்டத்தில் கூரை இடிந்து விழுந்ததில் ராணி பேகம் என்ற மூதாட்டி படுகாயமடைந்தார். அதன் பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பல வீடுகள் கடும் பனிப்பொழிவு காரணமாக அதிக சேதமடைந்து இருப்பதாக பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மோசமான வானிலை மற்றும் அதிக பனி பொழிவு காரணமாக நான்காவது நாளாக ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.