பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பிரித்த நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவனை காவலில் எடுத்து வியாசருக்கு அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் காசியை 3 நாட்கள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார்.
ஏற்கனவே, காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு கந்துவட்டி வழக்கு கடந்த வாரம் பதிவு செய்யப்பட்டது. வடசேரி காவல்நிலையத்தில் புதிதாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ட்ராவிட் என்பவர் காசி மீது புகார் கொடுத்துள்ளார். காசியிடம் வட்டிக்கு பணம் வாங்கி பின்பு அதனை கொடுத்த பிறகும், தனது வாகனம் மற்றும் முக்கிய பத்திரங்களை தரவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மோசடி இளைஞர் காசி மீது இன்று மேலும் ஒரு பெண் சமூக வலைத்தளத்தில் புகார் கூறியுள்ளார். காசி கும்பலால் பாதிக்கப்பட்டவர்களுள் தானும் ஒருத்தி என்றும், காசி தனி ஆளில்லை. அவன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் செயல்படுவதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். காசிக்கு உறுதுணையாக இருந்த அந்த கும்பலை காவல்துறை விட்டுவிடக்கூடாது என்று பாதிக்கப்பட்ட பெண் வலியுறுத்தியுள்ளார்.