காதலை ஏற்க மறுத்ததால் தோழியை கொன்று ஏரியில் வீசியதாக வாலிபர் விசாரணையில் போலீசாரிடம் கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பரில் ஜெனீவா என்ற 19 வயது இளம்பெண் காணாமல் போயுள்ளார். இந்த வழக்கை விசாரித்து வந்த போலீசார் எந்தவொரு தடயமும் கிடைக்காததால் திணறி வந்துள்ளனர். இதனையடுத்து மூன்று மாதங்களுக்குப் பிறகு Neuchâtel ஏரி பகுதியில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரது உடலை பரிசோதித்ததில் ஜெனீவாவின் தலையில் சுத்தியால் அடித்து காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. மேலும் அவர் கைகள் கட்டப்பட்டு மோசமான நிலையில் இருந்துள்ளார். குறிப்பாக ஜெனீவா அரைகுறை ஆடையுடன் காணப்பட்டுள்ளார். இதனால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஜெனீவாவின் நெருங்கிய நண்பரை விசாரித்துள்ளனர். இதனையடுத்து அவரே போலீசாரிடம் ‘நான் தான் கொலை செய்தேன்’ என்று உண்மையை ஒப்புக் கொண்டார். இதனை தொடர்ந்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இருப்பினும் அவர் தனது வாக்குமூலத்தை மாற்றி மாற்றி கூறியுள்ளார். அதிலும் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதால் அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்த தகவல்கள் பெற முடியாமல் போயுள்ளது. ஆனால் தலையில் பலமாக தாக்கியுள்ளதால் அவர் சுயநினைவு இழந்திருப்பார். அந்த நிலையில் அவரின் கைகளை கட்டி ஏரியில் வீசி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து அந்த வாலிபர் தப்பித்து சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இது மட்டுமின்றி சம்பவம் நடந்த நாளில் 5 முதல் 8 டிகிரி வரை குளிர் பதிவாகி இருந்ததால் அந்த பெண் உறைந்து மரணம் அடைந்து இருக்கலாம் அல்லது தண்ணீருக்குள் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். மேலும் குழந்தை பருவத்தில் இருந்தே அந்த வாலிபரும் இறந்த பெண்ணும் நன்கு பரீட்சையமானவர்கள் என்றும் நெருங்கிய நண்பர்களாக பழகியுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஜெனீவா அந்த வாலிபரின் காதலை ஏற்க மறுத்ததால் இவ்வாறு செய்திருக்கலாம் என்று அந்த பெண்ணின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.