திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் காதலி மீது பெட்ரோல் ஊற்றிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நியாம்பட்டு பகுதியில் சமியுல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய பி.எஸ்.சி நர்சிங் படித்த இளம்பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் குடும்ப சூழ்நிலையால் இளம்பெண் தனது காதலை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில் கோபமடைந்த சமியுல்லா ஒரு கேனில் 5 லிட்டர் பெட்ரோல் மற்றும் மற்றொரு கேனில் 10 லிட்டர் டீசல் வாங்கி கொண்டு தனது காதலியின் வீட்டுக்கு சென்று அப்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்கிறாயா இல்லையா என கேட்ட நிலையில் அவர் திட்டவட்டமாக மாட்டேன் என கூறி மறுத்துள்ளார். இதனையடுத்து கோபமடைந்த சமியுல்லா இளம்பெண்ணை தாக்கிய போது அவள் சத்தம் போட்ட நிலையில் தாய் வீட்டிற்குள் ஓடி வருவதற்குள் கையிலிருந்த பெட்ரோல் கேனை இளம்பெண் மற்றும் தன் மீதும் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இளம்பெண் தீக்குச்சியை தட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதற்குப்பிறகு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் கார் ஓட்டுனர் சமியுல்லா என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.