பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பகுதியில் டிரைவர் ஒருவருடைய 17 வயது மகள் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் பள்ளிக்கூடத்திற்கு சென்று வரும்போது அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், அந்த மாணவிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்கள் இருவருக்கும் இடையில் காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. இதற்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு அவர்களை கண்டித்தனர். அதுமட்டுமின்றி ஒழுங்காகப் படிக்க வேண்டும் என்று பெற்றோர் அவர்களுக்கு அறிவுரை கூறினர்.
இந்நிலையில் மாணவி அந்த சிறுவனின் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அந்த சிறுவனின் வீட்டிற்கு சென்று அவரை அழைத்து வந்துள்ளனர். அப்போது தற்போது நன்றாக படிக்க வேண்டும் என்றும் பின் திருமணம் செய்து வைக்கிறோம் என்று மாணவியிடம் பெற்றோர் தெரிவித்துள்ளனர். எனினும் மனவேதனையில் இருந்த மாணவி வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.