வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்து கிளை சிறையில் அடைத்தனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான், நன்னிலம் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களை மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இதுகுறித்து வலங்கைமான், அரித்துவாரமங்கலம், குடவாசல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் விஜயா, குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் காவல்துறையினர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வலங்கைமான் பகுதிகளில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த சில வாலிபர்களை தனிப்படை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் அவர்கள் திப்பிராஜபுரம் குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன், வலங்கைமான் கீழ தெருவை சேர்ந்த வெங்கடேஷ், திப்பிராஜபுரம் கீழத் தெருவை சேர்ந்த அறிவுச்செல்வம், கருவளச்சேரி மேல குளத்தங்கரை பகுதியை சேர்ந்த அஜித்குமார், 18 வயது சிறுவன் 2 பேர் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் இவர்கள் வலங்கைமான் மற்றும் கும்பகோணம், நாச்சியார்கோவில், குடவாசல் திருவிடைமருதூர் போன்ற பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்ததோடு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறைச்சாலையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பட்டா கத்திகள், 9 செல்போன்கள், தங்க நகைகள், 6 மோட்டார்சைக்கிள்கள் போன்றவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.