முதியவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள பத்தூர் பகுதியில் முதியவர் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொரடாச்சேரி கடை வீதியிலுள்ள ஒரு தியேட்டர் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் ஹரிஹரனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டுள்ளனர்.
ஆனால் பணம் கொடுக்க மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள் ஹரிஹரனிடம் இருந்த 200 ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து ஹரிஹரன் கொடுத்த புகாரின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட விடயபுரமத்தை சேர்ந்த முத்துக்குமார், மஞ்சக்கொல்லையை சேர்ந்த அருள்தேவன் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.