கீழ்பென்னாத்தூர் அருகே கல்லூரி மாணவர் , ஆட்டோ டிரைவரால் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கருங்காலிகுப்பம் கிராமத்தில் ,காசி நகரை சேர்ந்தவர் 19 வயது அஸ்வின் குமார். இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த இவருடைய அத்தை மகன் 33 வயதான செந்தாமரைக் கண்ணன் ,ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் செந்தாமரைக்கண்ணன் கடந்த 1ஆம் தேதி இரவு நேரத்தில், மாணவர் அஸ்வின் குமாரை கீழ்பென்னாத்தூருக்கு வரும்படி கட்டாயப்படுத்தி உள்ளார் ஆனால் இதற்கு அஸ்வின் குமார் மறுப்பு தெரிவிக்க ,கோபமடைந்த செந்தாமரைக்கண்ணன் கையில் கிடைத்த கத்தியால் மாணவர் அஸ்வினை குத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் கத்தி குத்தால் படுகாயமடைந்த, மாணவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அஸ்வின் குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கீழ்பென்னாத்தூர் பகுதி போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர் . இதற்கு முன்பாகவே செந்தாமரைக்கண்ணன், போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ,என்பது குறிப்பிடத்தக்கது .