கட்டிட தொழிலாளியை கல்லால் படுகொலை செய்த 2 நண்பர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள தியாகராய சாலையில் பிளாட்பாரத்தில் வெற்றிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணகிரி சத்திரம் பகுதியில் வசிக்கும் சங்கர், ரகு என்ற 2 பேர் வெற்றிவேலை அணுகி தங்களையும் கட்டிட வேலையில் சேர்த்து விடும்படி கேட்டுள்ளனர்.
இதனையடுத்து வெற்றிவேல் சங்கர் மற்றும் ரகு ஆகிய இருவரையும் தான் வேலை செய்யும் இடத்தில் கட்டிட பணிக்கு சேர்த்துள்ளார். இதனையடுத்து 3 பேரும் நண்பர்களாக பழகி வேலை செய்து வந்துள்ளனர். மேலும் வெற்றிவேல் தங்கும் பிளாட்பாரத்தில் சங்கரும் ரகுவும் தங்கியுள்ளனர். கடந்த 21-ஆம் தேதி அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் ஆத்திரமடைந்த சங்கர் மற்றும் ரகு ஆகிய இருவரும் வெற்றிவேலை கல்லால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்த வெற்றிவேல் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தேனாம்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெற்றிவேலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சங்கர் மற்றும் ரகு ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.