கோயம்புத்தூர் மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் மாங்கரை, தடாகம் போன்ற பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளன. கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த மலைப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. இந்த யானைகள் அனைத்தும் உணவு, தண்ணீர், பனை மரத் துண்டுகளை உண்பதற்காக தினம்தோறும் அருகில் இருக்கின்ற கிராமங்களுக்கும், செங்கல்சூளைகளுக்கும் வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை பெரிய தடாகம் பகுதியில் இருக்கின்ற செங்கல் சூளையில் ஆண் காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் காட்டு யானையை விரட்டுவதற்கு முயற்சி செய்தனர்.
அச்சமயத்தில் யானை அவர்களை துரத்தியதில் அசாம் மாநில கூலித்தொழிலாளி பாபுல் உசேன் என்பவர் யானையிடம் சிக்கிக்கொண்டார்.அதன் பின்னர் யானை அவரை தூக்கி வீசியதால் படுகாயமடைந்த அவர் கத்தியுள்ளார். உடனடியாக தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒலி எழுப்பியும், பட்டாசு வெடித்தும் யானையை அப்பகுதியில் இருந்து விரட்டியடித்தனர். அதற்குப் பின்னர் படுகாயம் அடைந்த தொழிலாளியை வீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
இந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி சின்ன தடாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றி வனத்துறையினர் கூறும்போது, “வனத்தை ஒட்டியுள்ள செங்கல் சூளைகளில் பனை மரத் துண்டுகளை பயன்படுத்துகின்றனர். அதிலுள்ள கூழை உண்பதற்காக யானைகள் தொடர்ந்து அப்பகுதிக்கு வருகின்றன. பனை மரத்துண்டுகளை பயன்படுத்த வேண்டாம் என்று அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் அவர்கள் அதனை கண்டு கொள்வதில்லை” என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.