Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“குறைஞ்ச விலையில வீடு கட்டி தர்றேன்” என்று கூறி… ரூ.6 1/2 கோடி மோசடி… கட்டுமான நிறுவன உரிமையாளர் கைது….!!

குறைந்த விலையில் வீடு கட்டி தருவதாக கூறி 6 1/2 கோடி ரூபாய் மோசடி செய்த கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரை காவல்துறயினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அமராவதி நகரை  சேர்ந்த தம்பதியினர் பரமசிவம் – மஞ்சுளா. மஞ்சுளா பவானியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் 18 ம் தேதி ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  மோசடி புகார் ஒன்று அளித்தார். அப்புகாரில், “ஈரோடு மாவட்டம் தாசம்பாளையம் பகுதியை சேர்ந்த எம்.எஸ்.பில்டர்ஸ் நிறுவன உரிமையாளரான சண்முகம் என்பவர் குறைந்த விலையில் வீடு கட்டிக் கொடுப்பதாக கூறினார். மேலும்  மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியம் பெற்று வருவதால்  ஒரு சதுர அடிக்கு 750 ரூபாய் கொடுத்தால் போதும் என்று ஆசைவார்த்தை கூறினார்.

எனக்கு சொந்தமான 4500  சதுர அடி நிலத்தில் மேல் மற்றும் கீழ் தளம் எடுப்பதற்காக 67 லட்சத்து 50 ஆயிரம் செலவாகும் என்று சண்முகம் தெரிவித்தார். அதனை நம்பி நான் அவரிடம்  33 லட்சம் கொடுத்தேன். அதன் பிறகு கட்டுமான பணியை தொடங்கிய அவர் சில நாட்களில் தொழிலாளர்களை வேலைக்கு வர விடவில்லை. பின்னர்  பல்வேறு காரணங்களை கூறி கட்டுமான பணியை தொடங்கவே இல்லை. அவரது அலுவலகத்திற்கு சென்றபோது அலுவலகம் பூட்டியிருந்தது. அவரை செல்போனில்  தொடர்பு கொள்ள முயற்சித்தபோது ஸ்விச் ஆப் என்று வந்தது.

எனவே எனக்கு வீடு கட்டி  தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த சண்முகத்தின் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தரவேண்டும்” என்று  மனுவில் கூறியிருந்தார்.புகாரின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மாவட்ட குற்றப்பிரிவு சூப்பிரண்டிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவர் நடத்திய விசாரணையில் கடந்த ஆண்டு மே மாதம்  முதல் டிசம்பர் மாதம் வரை வீடு கட்டி தருவதாக கூறி அப்பகுதியில் உள்ள மக்களிடம் சுமார் 6 1/2 கோடி ரூபாயை மோசடி செய்தது தெரிய வந்தது.

இந்நிலையில் எம். எஸ் பில்டர்ஸ் நிறுவன உரிமையாளரான சண்முகம் ஈரோடு அரசு மருத்துவமனை அருகே நின்று கொண்டிருப்பதாக குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சண்முகத்தை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில் பத்தாயிரம் ரூபாய், சரக்கு ஆட்டோ, மோட்டார் சைக்கிள், 2 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சண்முகத்தின் மனைவி பிரியா, மேலாளர் சுரேஷ் மற்றும் மேஸ்திரி உதயகுமார் , நவீன், குணசேகரன் ஆகிய  5 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |