காணாமல் போன மகனை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தின் முன்பாக தாய் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜல்லியூர் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ப்ரீத்தி என்ற மகளும், அன்பு என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் அன்பு அரசு மருத்துவமனையில் டைல்ஸ் ஒட்டும் பணிக்கு சென்றுள்ளார். அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது வெளியில் சென்ற அன்பு நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.
இது பற்றி மேஸ்திரி ஜோசப் அன்புவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காணாமல் போன அன்புவை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது தொடர்பாக ராஜா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அன்புவை தேடி வந்தனர்.
இந்நிலையில் அன்புவின் தாயார் ஜெயக்கொடி திடீரென காவல் நிலையம் முன்பாக கண்ணீர் விட்டு கதறி அழுத படி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் காணாமல் போன தனது மகனை காவல்துறையினர் கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் ஜெயக்கொடியை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.