ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கி விட்டு தப்பி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்துசெட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அன்னமார் கோவிலில் உள்ள உண்டியலில் பணம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காவல்நிலையத்தில் இணைப்பு காவலராக பணியாற்றி வரும் திருப்பூர் ஆயுதப்படை காவலரான அருள் குமார் என்பவர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவினாசி முத்து செட்டிபாளையம் பகுதியில் பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த 3 நபர்களை பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு ஆயுதத்தால் அருள்குமாரை தாக்கியதில் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து உடன் இருந்தவர்கள் அந்த 3 பேரையும் பிடிக்க முயன்ற போதும் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனையடுத்து அருள்குமார் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அவினாசி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.