சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்தியதோடு காவல்துறையினரை தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெக்கலூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 6 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் லோகேஸ்வரன், சட்டாம்பிள்ளை, நடராஜ், சுதன், லோகேஸ், முத்துசாமி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினரிடம் சிக்கிய ஆறு பேரும் திடீரென தகாத வார்த்தைகளால் திட்டி அங்கு கிடக்கும் மரக்கட்டையால் காவல்துறையினரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் காவல் அதிகாரி திருவேங்கடம் என்பவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆறு பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 66 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.