வீட்டில் புகுந்து 4 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகியபாண்டியபுரம் தெற்கு தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு தங்ககுமாரி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் முருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதனால் தங்ககுமாரி தனது வீட்டை பூட்டிவிட்டு சிகிச்சைக்காக தடிக்காரன்கோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு மருத்துவரின் அறிவுரையின்படி முருகன் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு உதவியாக மனைவி தங்ககுமாரியும் அங்கு இருந்துள்ளார்.
இந்நிலையில் தங்ககுமாரியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தங்ககுமாரி அங்கு விரைந்து சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் 16 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவை திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தங்ககுமாரி கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.