திருவாரூரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் சோதனைச் சாவடிகளை அமைத்து பொதுமக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அப்போது வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை காவல்துறையினர் நிறுத்தி இ -பாஸ் சான்றிதழை வைத்திருக்கின்றனரா என்று விசாரணை செய்துள்ளனர்.
இதனையடுத்து ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித் திரிந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, 25 க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் திருத்துறைப்பூண்டி பகுதியில் மட்டும் இதுவரை கட்டுப்பாடுகளை மீறி இயங்கிய 50 க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதோடு 100 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.