குடோனில் மூட்டைகள் பதுக்கி வைத்திருந்த பான்பராக் மற்றும் குட்கா போதைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவு பான்பராக், குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அவர் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு குடோனில் தனிப்படை காவல்துறையினருடன் சோதனை மேற்கொண்டார். அப்போது குடோனில் மூட்டை மூட்டையாக பான்பராக் மற்றும் குட்கா போதைப் பொருட்கள் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் நேதாஜி நகர் பகுதியில் வசித்து வரும் தாஜிதீன், மருத்துவர் காலனி பகுதியில் வசித்து வரும் பிஸ்மில்லா ஆகிய 2 பேரும் போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பான்பராக் மற்றும் குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு தாஜிதீன், பிஸ்மில்லா ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதிலும் இருவரும் போதை பொருட்களை சப்ளை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம், டவுன் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து குடோன் உரிமையாளர் கிருஷ்ணன், கட்டிட உரிமையாளர் செல்வராஜ் ஆகியோரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.