மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை காரை கூட்ரோடு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர்கள் வேலூரை சேர்ந்த ஷகில், பயாஸ் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் சேர்ந்து ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, ரத்தனகிரி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து 20 மோட்டார் சைக்கிள்களை திருடியதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 20 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து 2 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.