முன்விரோதத்தால் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பழைய சாட்சியாபுரம் சாலையில் கனகராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கேரளாவில் உள்ள ஒரு பேக்கரி கடையில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த கனகராஜ் தனது நண்பர்கள் அய்யனார், பாண்டிமணி, சுதாகர், அந்தோணி போன்றோருடன் குறுக்கு பாதையில் உள்ள ஒரு மைதானத்தில் வைத்து மது அருந்தி இருக்கின்றார். அப்போது அதே மைதானத்தில் மது அருந்திக் கொண்டிருந்த பனையடிப்பட்டி தெருவைச் சேர்ந்த சிட்டிசன், சிட்டு, சாமுவேல் ஆகியோர் தகராறு செய்ததாக தெரிகின்றது.
இதனையடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கனகராஜ் தனது வீட்டின் அருகில் நண்பர் அய்யனாரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிட்டு, சிவா, முத்துக்குமார், சாமுவேல் மற்றும் சிலர் முன்விரோதம் காரணமாக கனகராஜை அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற அய்யனாரையும் அரிவாளால் வெட்டுயுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கனகராஜ் கொடுத்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.