காவிரி ஆற்று சுழலில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள அஸ்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மகன் திவாகரன்(17). கோவிந்தசாமியும் அவரது மகனும் பொன்னகரம் மாங்கரை கிராமத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு திவாகரன் தனது உறவினர்களுடன் ஒகேனக்கல் அடுத்து உள்ள ஊட்டமலை காவிரி ஆற்று பகுதிக்கு குளிக்க சென்றுள்ளார். திவாகரன் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக சுழலில் சிக்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார் .
இதை பார்த்த அவரது உறவினர்கள் உடனடியாக தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர் . தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி திவாகரனின் உடலை மீட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் திவாகரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அங்கிருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் இச்சுழலில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.