Categories
தேசிய செய்திகள்

காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் பகுதியில் உள்ள காவிரி கரையோரப் பகுதிகளுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் நீரின் அளவு உயர்ந்து வருகிறது. கபினி அணையின் மொத்த உயரமான 84  அடியில் தற்போது நீர்மட்டம் 80 அடியை கடந்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 40 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் அப்படியே காவிரியில் திறந்து விடப்படுகிறது. அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்தும் 4 ஆயிரத்து 700 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

இந்த இரு அணைகளில் இருந்தும் தற்போது 45 ஆயிரத்து 300 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.  இதனால் ஒகேனக்கல்லில் உள்ள காவிரி கரையோர பகுதி மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் மற்றும் கேரள பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிப்பதால் தமிழகத்திற்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |