சட்டவிரோதமாக முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 200 மூட்டை மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பாலாற்றுப் பகுதியிலும், தேவஸ்தானம், பெரியபேட்டை, பழைய வாணியம்பாடி, ஒடப்பேரி போன்ற பகுதிகளில் அடிக்கடி மணல் கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி வாணியம்பாடி தாசில்தார் மோகன், மண்டல துணை தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம் ஆகியோர் ஒடப்பேரி ஆற்றுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள முட்புதரில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து மொத்தம் 200 மணல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோன்று ராமையன்தோப்பு பகுதியிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.