பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு, ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்தலுக்காக தொடர் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்த பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு நேற்று பாரம்பரிய உடையில் நடந்து சென்று வழிபாடு செய்தார்.
அதன் பின்னர் பாண்டவர்கள் தவம் செய்ததாக கூறப்படும் நதிக்கரையில் உள்ள சிறிய புனித குகையில் தியானத்தை மேற்கொண்டார். இன்று காலை வரை தியானத்தில் இருப்பார் என்று கூறப்பட்டது. அதன்படி பிரதமர் மோடி இன்று காலை வரையில் தியானம் செய்து தியானத்தை முடித்த பின்னர் மீண்டும் சாமியை தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ‘‘கேதார்நாத்தில் சுவாமி தரிசனம் செய்ததை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். கேதார்நாத்துக்கும் எனக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது.கேதார்நாத் வளர்ச்சிக்க்கு நான் பெரிதும் பணியாற்றி வருகிறேன்.
வீடியோ காட்சி மூலம் எனக்குரிய தகவல்களை நான் சேகரித்து வருகிறேன். நாம் அனைவரும் கொடுப்பதற்காக படைக்கப்பட்டுள்ளோமே தவிர எடுப்பதற்காக அல்ல. நாட்டு மக்களுக்காக நான் தியானம் செய்தேன். நாட்டில் நடப்பதில் இருந்து விலகி ஆன்மீக பயணமாக கேதார்நாத் வந்துள்ளேன்’’ என்று பிரதமர் மோடி கூறினார்.