சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற போது தவறிவிழுந்த பயணியை ரயில்வே காவலர் ரயிலுக்குள் பிடித்து தள்ளி காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் குறிப்பிட்ட நேரத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பியது. இதையடுத்து அதே இரயிலில் புனே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் முன்பதிவு செய்திருந்தார்.
அவர் முன்பதிவு செய்திருந்த பெட்டியிலேயே சரியாக ஏற வேண்டும் என்பதற்காக ஓடும் ரயிலில் ஏற முயற்சித்துள்ளார். அப்போது அவரது லக்கேஜ் சுமையால் கால் தவறி பின்புறமாக ரயிலின் சக்கரத்திற்குள் அவர் இழுக்கப்பட, இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே காவலர் ஒருவர் ஓடும் ரயிலில் அவரின் பின்புறமாக அழுத்தம் கொடுத்து பெட்டிக்குள் தள்ளி அவரை காப்பாற்றியுள்ளார்.
இதில் சிறிதளவு பிழை ஏற்பட்டிருந்தாலும் ரயில்வே காவலரின் உயிரும் சேர்ந்து பறிபோயிருக்கும். ஆனால் அவரது உயிரை பொருட்படுத்தாமல் பயணியை ரயில்வே காவலர் காப்பாற்றிய சம்பவம் சகபயணிகளிடையே பாராட்டை பெற்றுள்ளது. மேலும் இதுகுறித்த சிசிடிவி காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.