கன்னியாகுமரி மாவட்டத்தில் கீரை வகைகளின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் இருக்கின்றன. இதனால் பல்வேறு விவசாய பொருட்கள் தேக்கம் அடைந்து அவற்றின் விலை சரிந்து காணப்பட்டு வருகிறது. அந்த வகையில்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், வடசேரி, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கீரை வியாபாரம் அமோகமாக நடைபெறும். கீரை வகைகளைப் பொறுத்தவரை வெந்தயக் கீரை, அகத்திக் கீரை, தண்டுக்கீரை உள்ளிட்டவற்றின் வியாபாரம் மும்முரமாக நடக்கும். தற்போது இவற்றின் விலை சரமாரியாக குறைந்துள்ளது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்,
கன்னியாகுமரியை பொருத்தவரை இயற்கை விளைந்த பூமி. இங்குள்ள மக்கள் கீரை, சத்து நிறைந்த காய்கறிகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும் மதிய உணவிற்கு கீரை கூட்டு என்பது இப்பகுதி மக்களின் பாரம்பரிய உணவாக கருதப்பட்டு வருகிறது. ஆகையால் நாள்தோறும் கீரை விற்பனை ஜோராக நடைபெறும்.
ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவால் கீரைகளின் வரத்து அதிகரித்துள்ள நிலையில், வியாபாரம் குறைந்து காணப்படுகிறது.ஆகவே அகத்திக் கீரை, தண்டுக் கீரை, வெந்தயக்கீரை ஆகியவை ரூ 15, ரூ20 ரூ 30 என விற்கப்பட்டு வந்த நிலையில், அனைத்து வகை கீரைகளும் தற்போது ரூ5க்கு தான் விற்கப்படுவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.