Categories
தேசிய செய்திகள்

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘குட்டி’ கெஜ்ரிவால் – தேர்தல் முடிவுகளால் ஆம் ஆத்மி உற்சாகம்.!

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போல், உடையணிந்த சிறுவனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு, அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி உரையாற்றியபோது

இத்தேர்தலில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி 62 இடங்களில் முன்னிலை வகித்து, ஆட்சியை தக்க வைத்துள்ளது. அடுத்த இடத்தில் எட்டு தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்கவைத்தது மட்டுமின்றி, பிரமாண்டமான வெற்றியையும் பிடித்துள்ளது. இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் காலை முதல் கொண்டாட்ட மனநிலையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், டெல்லி முதலமைச்சரும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் போல், உடையணிந்து சிறுவன் ஒருவன் போஸ் கொடுப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் மிகவும் தத்ரூபமாக இருப்பதனால், ஆம் ஆத்மி தொண்டர்கள் ‘குட்டி’ கெஜ்ரிவால் என்றும், ’குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நேசிக்கும் ஒரே கட்சி ஆம் ஆத்மி தான்’ எனவும் சிலாகித்து வருகின்றனர். அந்தப் புகைப்படம் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |