டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 8) தேர்தல் நடத்தப்பட்டு, இன்று வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பல்வேறு தொகுதிகளிலும் ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்துவந்தது. பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களை ஆம் ஆத்மி எளிதில் பெறும் என்பதால் அக்கட்சியினர் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிவருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி காற்று மாசைக் கருத்தில்கொண்டு ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தின்போது பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கெஜ்ரிவாலின் கோரிக்கையை ஏற்ற ஆம் ஆத்மி தொண்டர்கள், பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்த்து இனிப்புகள் வழங்குவது உள்ளிட்ட மற்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் நிலவும் காற்று மாசைக் குறைப்பதாகவும் ஆம் ஆத்மி தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.