பெட்ரோல் பங்கில் பணத்தை திருடிச் சென்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பிச்சாண்டாம்பாளையத்தை கிருஷ்ணகுமார் என்பவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகின்றார். இதில் கோவையைச் சேர்ந்த குணசேகர் என்பவர் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பவானி பழைய காடையம்பட்டியை சேர்ந்த வடிவேல் என்பவர் கடந்த 20-ஆம் தேதி பெட்ரோல் பங்கில் தொழிலாளியாக பணிக்கு சேர்ந்தார். இதனையடுத்து கடந்த 2-ஆம் தேதி காசாளர் குணசேகர், வடிவேலிடம் பண பெட்டியை பார்த்துக்கொள் என்று கழிப்பறைக்கு சென்றுவிட்டார். அதன்பின் குணசேகர் வந்த பின் வடிவேல் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனைதொடர்ந்து குணசேகர் அன்றைய விற்பனையை சரிபார்த்தபோது 10 ஆயிரம் ரூபாய் குறைவாக இருந்தது. இதுகுறித்து குணசேகர் பங்க் உரிமையாளர் கிருஷ்ணகுமாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின்படி கிருஷ்ணகுமார் பங்கிற்கு விரைந்து சென்று அங்கு இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது குணசேகரன் கழிப்பறை சென்ற நேரத்தில் வடிவேல் பங்கிலிருந்த பண பெட்டியை திறந்து அதில் 10 ஆயிரம் ரூபாயை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்தது கேமராவில் பதிவாகி இருந்தது. இதனால் கிருஷ்ணகுமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வடிவேலை கைது செய்ததோடு அவரிடமிருந்த 4 ஆயிரம் ரூபாயை மட்டும் பறிமுதல் செய்தனர்.