ஐஎஸ்எல் ஆறாவது சீசனின் முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அத்லெடிக்கோ கொல்கத்தாவை வீழ்த்தியது.
ஐபிஎல் கிரிக்கெட் ஸ்டைலில், இந்தியாவில் ஐஎஸ்எல் (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து தொடர் நடத்தப்பட்டுவருகிறது. இந்தத் தொடரின் ஆறாவது சீசன் இன்று கொச்சியில் கோலகலமாகத் தொடங்கியது. இந்த சீசனின் முதலில் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, அத்லெடிக்கோ கொல்கத்தாவுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இதுவரை இவ்விரு அணிகள் மோதிய 12 போட்டிகளில் கேரளா அணி இரண்டு போட்டிகளிலும், கொல்கத்தா அணி ஐந்து போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. ஏனைய ஐந்து ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளது. இதனால், இன்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றியுடன் இந்த சீசனைத் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டி என்பதால் வழக்கம் போல கேரள பிளாஸ்டர்ஸ் அணிக்கு ரசிகர்கள் பேராதரவு தந்தனர். ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே கொல்கத்தா வீரர் கார்ல் மெஹ்யூக் மிரட்டலான முறையில் கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து, இரு அணிகளும் வழக்கம் போல கவுண்டர் அட்டாக் ஆட்டத்தில் ஈடுபட்டு களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டனர்.
ஆட்டத்தின் 30ஆவது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் தடுப்பாட்ட வீரர்கள் செய்த தவறால், கேரளாவிற்கு பெனால்டி வழங்கப்பட்டது. இதை அந்த அணியின் ஸ்ட்ரைக்கர் ஒக்பேஷே (Ogbeche) கோலாக்கினார். பிறகு, மீண்டும் கொல்கத்தா வீரர்களின் தவறு ரிப்பிட்டாக, மீண்டும் ஒக்பேஷே சிறப்பான முறையில் கோல் அடித்தார். இதனால், ஆரம்பத்தில் ஒரு கோல் பின் தங்கியிருந்த கேரளா அணி முதல் பாதி முடிவில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாம் பாதியில் கேரளா அணி சிறப்பாக டிஃபெண்ட் செய்து கொல்கத்தாவை கோல் அடிக்காமல் பார்த்துக்கொண்டது. இறுதியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கணக்கில் அத்லெடிக்கோ கொல்கத்தாவை வீழ்த்தி, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.நாளை நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் நடப்பு சாம்பியனான பெங்களூரு எஃப்சி அணி, நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி நாளை இரவு 7.30 மணியளவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிப்பரப்பாகிறது.
FULL-TIME
We kick-start our Season 6 campaign with all 3⃣ points!😄#KERKOL #YennumYellow pic.twitter.com/V0nxUPdhOy
— Kerala Blasters FC (@KeralaBlasters) October 20, 2019