கேரளாவில் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
உலகத்தை நடுங்க வைத்து கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 28 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் கேரளாவில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 20 ஆயிரம் கோடி ரூபாய்க்குச் சலுகைத் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாகத் தெரிவித்து, வருமான இழப்பால் பாதிக்கப்படுவோருக்குக் கடன் வழங்க 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் நியாய விலைக்கடைகளில் மக்கள் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், மின்சாரம், குடிநீர்க் கட்டணத்தை அபராதம் இல்லாமல் கட்டுவதற்கு ஒரு மாதக் கால நீட்டிப்பு வழங்கப்படுவதாகவும் அறிவித்தார்.