ஆடவர்களுக்கு நடத்தப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் பாணியில், மகளிருக்கான கால்பந்து தொடர் இந்தியன் மகளிர் கால்பந்து லீக் என்ற பெயரில் 2017ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்வருகின்றன. இதன் நான்காவது சீசன் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்றுவருகிறது. இதில், சேது மதுரை, கோகுலம் கேரளா, பராடோ எஃப் ஏ உள்ளிட்ட 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்படும் இத்தொடரில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்நிலையில், இன்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான போட்டியில் கோகுலம் கேரளா அணி, பெங்களூரு யுனைடெட் அணியை எதிர்கொண்டது. இந்த சீசனில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று சூப்பர் ஃபார்மில் இருந்த கோகுலம் கேரள அணி, அந்த ஃபார்மை இன்றைய ஆட்டத்திலும் கடைபிடித்தது.
ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே பெங்களூரு வீராங்கனை கோமல் குமாரி செல்ஃப் கோல் அடிக்க, கோகுலம் கேரள அணி கோல் ஸ்கோரை தொடக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐந்தாவது நிமிடத்தில் பெங்களூரு வீராங்கனை சத்யபதி கதியா கோல் அடித்ததால் ஆட்டம் அனல் பறக்கத் தொடங்கியது. இதையடுத்து, ஆட்டத்தில் மீண்டும் கேரள அணி ஆதிக்கம் செலுத்தினாலும் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கணக்கில் முடிவடைந்தது.
இதையடுத்து, நடைபெற்ற இரண்டாம் பாதியில் கேரள அணி ஆதிக்கம் செலுத்தியது. அதன் பலனாக 46ஆவது நிமிடத்தில் கேரள வீராங்கனை சபித்ரா பந்தாரி கோல் அடித்து அசத்தினார். மேலும், கேரள அணியின் நட்சத்திர முன்கள வீராங்கனையான கமலா தேவி 51, 58, 90 ஆகிய நிமிடங்களில் ஹாட்ரிக் கோல் அடித்து மிரட்டினார்.
இதனால், கோகுலம் கேரள அணி 5-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு யுனைடெட் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் கோகுலம் கேரள அணி 12 புள்ளிகளுடன் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது