தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1571 உயிர் இழந்துள்ளார்கள். கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை விளங்குகிறது. அங்கு மட்டும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியளவில் கொரோனா பாதிப்பில் 2ஆம் இடம் இருக்கும் தமிழகம் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றது. நாட்டிலேயே அதிகமான பரிசோதனை செய்த மாநிலங்களில் தமிழகமே முதன்மையான இடத்தை பெற்றுள்ளது. அதே போல இறப்பு விகிதம் மத்திய சுகாதாரத்துறையினரால் பாராட்டும் வகையில் குறைவாக உள்ளது.
நாட்டில் உள்ள பல மாநிலங்களை விட முன்மாதிரியான சிகிச்சையை தமிழக அரசு மேற்கொண்டு வந்தாலும் சிலர் இதனை வைத்து அரசு அரசியல் செய்கின்றது என்று எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கின்றார்கள் என்று ஆளும் கட்சியும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் தான் தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவல் ஆகவில்லை என்று தமிழக முதல்வர் சொல்லி வருகின்றார். அதிகப்படியான எண்ணிக்கையை வைத்துக்கொண்டு தமிழக அரசு ஏன் இப்படி சொல்கின்றது என்று பலரும் வினவி வருகின்றார்கள்.
அதே வேளையில் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா தங்கள் மாநிலங்களில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டது என்று சொல்கிறார்கள். கர்நாடகாவில் 25,317பேருக்கு தொற்று ஏற்பட்டு 7ஆவது இடத்திலும், கேரளாவில் 5,623பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 18ஆவது இடத்திலும் இருக்கின்றன. இந்த இரண்டு மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் தங்களின் மாநிலங்களில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்கள். தமிழக அரசு எதற்காக மறைக்கின்றது என்ற மர்மம் பலருக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளது.