கேரளாவில் ஏற்பட்ட விமான விபத்தால் மிகவும் வருத்தப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.1344 விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 173 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 15 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது.
இந்த நிலையில் கேரள விமான விபத்து பற்றி அமெரிக்கா தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கேரள விமான விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்காக எங்கள் இதயம் வெளியே செல்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்காவும், நண்பர்களுக்காகவும் நாங்கள் மிகவும் துயரப்படுகின்றோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது.