கேரளாவில் அரசு அனுமதி அளித்தும் திரையரங்குகள் திறக்கப்படாததால் அங்கு மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .
கேரள மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 10 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன . இதையடுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஜனவரி 5ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கினார் . ஆனால் கேரளாவில் அரசு அனுமதி அளித்தும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை . திரையரங்குகள் மூடப் பட்டிருந்த காலத்தில் அதற்கு கணக்கிடப்பட்ட மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் மற்றும் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இதற்கு அரசு செவி சாய்க்காததால் திரையரங்குகளை திறக்க அதன் உரிமையாளர்கள் முன்வரவில்லை . இதனால் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் கேரளாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது . கேரளாவில் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் மலையாள முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய் படங்களுக்கும் கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது .