கேரளாவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.அதன்படி கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கேரளா மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி கண்டது . அதில் 15.8 சதவீதம் வாக்குகள் பெற்று ஒரு தொகுதியில் பாஜக வென்றது . இதனால் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே நேரடி போட்டி உள்ள நிலையில் இந்த முறை தனது வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்கத்தில் பாஜக மிகத் தீவிரமாக களமிறங்கியுள்ளது. மேலும் பாஜகவின் வேட்பாளர்களை குறித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர் அமித்ஷா ,பாஜக தேசிய தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பி. எல். சந்தோஷ் போன்ற பல உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஆலோசித்து அந்த அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பாஜக பொதுச்செயலாளர் அருண் சிங் கேரள மாநில பாஜக பட்டியலை வெளியிட்டுள்ளார்.அதில் பாஜக தலைவர் சுரேந்திரன் இரண்டு தொகுதிகளிலும், பாலக்காடு தொகுதியில் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் மற்றும் நேமம் தொகுதியில் கும்மன் ராஜசேகரன், திருச்சூர் பகுதியில் நடிகர் சுரேஷ் கோபியும் போட்டியிடுகின்றனர். அதுமட்டுமன்றி கேரளாவில் 140 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக 115 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மீதமுள்ள 25 இடங்களில் அதன் 4 கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன என்று அறிவித்துள்ளனர்.