கேரளாவில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கேரளாவில்தான் கண்டறியப்பட்டார். கேரளாவில் முதன் முதலாகத் கொரோனா பரவத் தொடங்கி இருந்தாலும் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே கொரோனா தடுப்பு நடவடிக்கையை அம்மாநிலம் சிறப்பாக கையாண்டு வந்தது. இதனால் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களை ஒப்பிடும்போது இறப்பு விகிதமும், பரவல் விகிதமும் மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இரண்டு தினங்களுக்கு முன்பு முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது. நேற்று மீண்டும் புதிய உச்சமாக தினசரி பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 940 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மேலும் 21 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 657 ஆக உயர்ந்துள்ளது.