திருமதி கனடா அழகி போட்டியில் முதன்முறையாக கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண் கலந்துகொள்ள இருக்கிறார்.
கேரளாவில் உள்ள சேர்த்தலை என்ற பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய ஷெரின் ஷிபின் என்பவர் வரும் ஆகஸ்ட் மாதத்தில், ரொறன்ரோவில் நடக்கவுள்ள திருமதி கனடா அழகிப்போட்டியில் பங்கேற்க இருக்கிறார். இதுகுறித்து ஷெரின் ஷிபின் கூறுகையில், உலகம் முழுக்க பெண்கள் எதிர்கொள்ளும் பாலின பாகுபாடு, என்னை வேதனையடையச்செய்தது.
இந்த பிரச்சனைகளை வெளியில் கொண்டு வருவதற்கு ஒரு வாய்ப்பை எதிர்பார்த்தேன். கர்ப்பமான பெண்களும், குழந்தை பெற்றுக் கொண்ட பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் நிறைய உள்ளது. பிரசவ விடுமுறை தொடர்பில் சரியான ஒரு கொள்கை கிடையாது.
பணி நேரங்களில் குழந்தைக்கு பாலூட்ட தனிப்பட்ட வசதி, குழந்தைகளுக்கான காப்பகங்களும் இல்லை. இதுமட்டுமல்லாமல் குழந்தை பிறந்த பிறகு குடும்பத்தினரும், பணி நிறுவனங்களும் பெண்களுக்கு ஆதரவு கொடுப்பதில்லை. எனவே தாங்கள் அதிகம் விரும்பும் பணியை கை விடக்கூடிய நிலை உண்டாகிறது.
ஆனால் இந்த அழகிப் போட்டியில் அழகு மட்டுமல்லாமல், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. எனவே தான் இதில் கலந்துகொண்டு பெண்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச முடிவெடுத்துள்ளதாக கூறியிருக்கிறார். இவருக்கு ஷிவின் என்ற கணவர், அலைனா, சுஹானா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.