உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டூர் காவல் குடியிருப்பில் சந்திரமோகன் வசித்து வருகிறார். இவர் ஆசனூர் காவல் நிலையத்தில் ஏட்டாக இருக்கின்றார். இவருக்கு தாமரைச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தாமரைச்செல்வி கடந்த 2 ஆண்டுகளாக முடக்குவாதத்தால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனையில் தாமரைச்செல்வி சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் தாமரைச்செல்விக்கு உடல்நலம் குணமாகாததால் எந்த வேலையும் செய்ய முடியாமல் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தாமரைச்செல்வியின் அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த சந்திரமோகன் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தாமரைச்செல்வி பிளேடால் தன் கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனையடுத்து சந்திரமோகன் மனைவியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அதன்பின் மேல் சிகிச்சைக்காக தாமரைசெல்வி கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தாமரைச்செல்வி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.