டி20 உலகக்கோப்பை அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. ஏற்கனவே தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த அணிகள் நேரடியாக இந்தத் தொடரில் விளையாட தகுதிப் பெற்றன.
இந்த நிலையில், மீதமிருக்கும் ஆறு அணிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில், நேற்று அபுதாபியில் ஓமன் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அயர்லாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரெய்ன் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 41 ரன்கள் அடித்தார். இப்போட்டியில் அவர் ஒரு சிக்சர் அடித்ததன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிக சிக்சர்களை (35 சிக்சர்கள்) விளாசிய நியூசிலாந்து வீரர் கோலின் முன்ரோவின் உலகச் சாதனையை சமன் செய்துள்ளார்.
இந்தத் தகுதிச் சுற்றுப் போட்டியில் அவர் இன்னும் மூன்று போட்டிகளில் விளையாடவுள்ளார். இதனால், கோலின் முன்ரோவின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அயர்லாந்து அணிக்காக 84 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இதுவரை 1418 ரன்களை எடுத்துள்ளார். நாளை (அக்டோபர் 23) நடைபெறவுள்ள போட்டியில் அயர்லாந்து அணி, கனாடாவுடன் மோதுகிறது.
— ICC (@ICC) October 21, 2019