கசிநாயக்கன்பட்டியில் சட்டவிரோதமாக செயற்கை மணல் உருவாக்கி கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கசிநாயக்கன்பட்டி பகுதியில் நிலப்பகுதியில் உள்ள மண்ணை தோண்டி எடுத்து அதனை சுத்தம் செய்து செயற்கை மணல் உருவாக்கி கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசார் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று செயற்கை மணல் தயாரித்து கடத்தலில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயன், பெரிய குனிச்சி கிராமத்தை சேர்ந்த 17 வயது வாலிபர் ஒருவர் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்த மணல் தொட்டிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, 2 யூனிட் மணல், மின்மோட்டார் ஆகியவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி சட்டவிரோதமாக மணல் கடத்தல் மற்றும் தொட்டிகளை அமைத்து செயற்கை மணல் உருவாக்கும் செயல்களில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.